23.
கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடுஞ்சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரு போலாமே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்.
பொருள்
கீழ்மக்கள் கோபம் கொண்டால் கல் பிளப்பது போலத் தங்களின் நட்பை நிரந்தரமாக முறித்துக் கொள்வர். நற்குணமுடையவர்கள் கோபம் கொண்டால் தங்கக் குடம் உடைந்ததைப் போல மீண்டும் உருக்கி இணைத்துக் கொள்ளலாம். ஆனால், சீரிய சான்றோர்களின் கோபமானது வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு தண்ணீரைத் கிழித்துச் செல்லும்போது ஏற்படும் தழும்பு போல, நொடியில் மறைந்துவிடும்.